ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை !

Spread the love

சென்னை: ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் 75,000 மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணல் இல்லாமல் கட்டுமான தொழில் தமிழகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணல் லாரிகள் ஓடாத காரணத்தால் எங்களால் சாலை வரி மற்றும் மாதத் தவணை கட்ட இயலவில்லை. தற்போது நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் கொள்ளுறு ரவிந்திரா ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்120 மணல் குவாரிகள் திறக்கப்பட வேண்டும். எனவே, ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அம்மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்களுக்கு தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத் தர வேண்டும்.

இதன் மூலம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் அதிகமாக நடைபெறும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம், பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறும். இதன் மூலம் மணலை நம்பியுள்ள லாரி உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்களை முதல்வர் வாழ வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours