புதுச்சேரி: மது போதையில் கடலில் விழுந்த தவெக தொண்டர்களை, புதுச்சேரி போலீஸார் மீட்டு முதலுதவி அளித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்தவர்சுரேஷ் சுந்தர் (23). புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவர்கள் இருவரும் நேற்று புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த பிரகாஷ் கடலிலும், சுரேஷ் சுந்தர் கடற்கரை பாறை இடுக்கிலும் விழுந்து கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஒதியஞ்சாலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமைக் காவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த சுரேஷ் சுந்தர், பிரகாஷ் ஆகியோரை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வந்த பிரகாஷ், சுரேஷ்சுந்தர் இருவரும், மாநாடு முடிந்ததும் அன்று இரவு புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
பல இடங்களிலும் சுற்றிய அவர்கள் நேற்று பாண்டி மெரினா கடற்ரையில் மது போதையில் விழுந்து கிடந்தது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் குறிப்பிட்டனர்.
+ There are no comments
Add yours