விஜய்யின் பாசிஸ..பாயாச கேள்வி சரியானதே!- டி.ஜெயக்குமார்

Spread the love

சென்னை: “அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா” என விஜய் எழுப்பிய கேள்வி சரியானதே என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், டி. ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி. ஜெயக்குமார், “எம்ஜிஆர் ஆட்சியில் தான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் ஜெயந்தி விழாவாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

ஒப்பற்ற தலைவராக எம்ஜிஆர் திகழ்வதால்தான் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட அவரது பெயரை உச்சரிக்கின்றனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விளையாட்டு திடல்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது, விளையாட்டு துறைக்கு ஒரு சாபக் கேடு. நிதி வருவாய் குறைவாக உள்ளது என்ற காரணத்தை காட்டி மாநகராட்சி விளையாட்டு திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல. கார் பந்தயம் நடத்துவதற்கும், கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கும் நிதி இருக்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் விளையாட்டு துறையை மேம்படுத்த நிதி இல்லையா?

‘அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா’ என விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான். மத்திய அரசின் நடவடிக்கையை போன்றுதான் திமுக அரசின் செயல்பாடும் இருக்கிறது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், பத்திரிக்கை துறையினரை சிறையில் அடைப்பது என பல்வேறு வகைகளில் திமுக அரசு பாசிச முறையை கையிலெடுத்துள்ளது. எனவே விஜய் கூறியதில் எந்த தவறும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியை தமிழக அரசு வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்காமல் இருப்பதால் தமிழக முழுவதும் மீனவர்கள் மிகுந்த மன வேதனையோடு இருக்கின்றனர். மத்திய அரசை எதிர்பாராமல் விரைவில் அவர்களுக்கான நிதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours