தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்.15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழாவானது வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சமயத்தில், செப்.15 மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில், நேற்று இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் தலைமை செயலாளர் சிவ்டாஸ் மீனா, திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தரோஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது முதலமைச்சர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்கள். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும், ஆண்டுந்தோறும் பெற போகிறார்கள்.
அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்தி காட்டும் பொறுப்பும், கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்.15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
மகளிர் உரிமைத்தொகையை பெற பிரத்யேக ஏ.டி.எம்.கார்டுகள் வழங்கப்பட உள்ளது என்றார். மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகையில் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்? என்று முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டது. பரிசீலினை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில்ம், 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும்.
எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும் எனவும் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். மனுக்கள் நிராகரிப்பு பற்றி சம்பந்தப்பட்ட மகளிருக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுக்க வேண்டும். அதிகாரிகள் தரும் விளக்கத்தில் ஏதேனும் குறை இருந்தால் மீண்டும் மனு செய்து தகுதியுடைவர்களாக மாற்றி கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளி கூட விடுபட மாட்டார்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்து பார்க்கலாம். நிராகரிக்கப்பட்டவற்றில் 3 லட்சம் விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் அரசு பணியில் இருக்கும் மகளிர் என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோரின் குடும்பத்தை சேர்ந்தோர் என்ற காரணத்தினாலும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், சொந்த கார், ஆண்டுக்கு 3,600 யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours