சென்னை: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசு மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண மது வகைகள் 60 சதவீதம், நடுத்தர வகை மது வகைகள் 25 சதவீதம், ப்ரீமியம் மது வகைகள் 15 சதவீதம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி வருமானம் கிடைக்கிறது. இதுவே வார இறுதி நாட்களில் ரூ.200 கோடியும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அக்.30-ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி 235.94 கோடிக்கும் என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில், ரூ.467 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை ரூ.29 கோடி குறைந்திருக்கிறது.
மது விற்பனை குறைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், குறிப்பாக தமிழகமுதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இதற்கு முக்கிய காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதம் போதைப் பொருட்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின், ‘போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம்’, என விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அதேபோல், விசிக தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடுநடத்தியது, தவெக தலைவர் நடிகர் விஜய், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றிமாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில், ‘தவறான பழக்கத்தில் எப்போதும் ஈடுபடாதீர்கள், உங்கள்நண்பர்கள் அப்படி இருந்தால் முடிந்தளவுக்கு திருத்த பாருங்கள்’,என அறிவுரை வழங்கி, மாணவர்களை போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுக்க வைத்தது, ‘மாநாட்டுக்கு யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது’, என அறிவுறுத்தியது என இது போன்ற காரணங்களால், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு தீபாவளி தினத்தில் மதுவிற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விசிக செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சாமானிய மக்களிடம் மது மற்றும் போதை பொருட்களுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்னும் விசிக மாநாட்டின் நோக்கம் முதல் கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை ரூ.29.10 கோடி சரிவு என்பது சாதாரணமானதல்ல. விசிகவின் மாநாட்டின் தாக்கம்யாரை சென்றடைய வேண்டுமோஅவர்களிடம் சென்றடைந்திருக்கிறது. இந்த மாற்றத்தை விசிகவின் வரலாற்று சாதனையாகவே உரிமை கொண்டாடுவது பொருத்தமானதே” என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், டாஸ்மாக் சங்கநிர்வாகிகளும், அதிகாரிகளும் வேறு சில காரணங்களையும் முன்வைக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை மாத இறுதியில் வந்தது விற்பனை குறைவுக்கு முதல் காரணம். மாத இறுதி என்பதால், பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. அதனால், பெரும்பாலானோர் மது வாங்குவதை தவிர்த்துள்ளனர். மேலும்,தமிழகத்தில் கடந்த அதிமுக,தற்போது திமுக ஆட்சியில் மொத்தம் 1,500 டாஸ்மாக் கடைகள்குறைக்கப்பட்டுள்ளன. இதுவும் இன்னொரு காரணம்.
அதேபோல், டாஸ்மாக் கடைகளுக்கு போட்டியாக தனியார் மனமகிழ் மன்றம் (கிளப்), ஹோட்டல் பார்கள் எண்ணிக்கை கூடியதும் மது விற்பனை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இதனால், தீபாவளிக்கு அரசுக்கு வர வேண்டிய சுமார் ரூ.50 கோடிவருவாய், தனியாருக்கு சென்றுள்ளது. இந்த வருவாய் தீபாவளி மதுவிற்பனை கணக்கில் வரவில்லை. இதுவே, கடந்த ஆண்டை விட ரூ.29கோடி குறைந்ததற்கு காரணம். இவ்வாறு கூறினர்.
+ There are no comments
Add yours