நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி கடந்த 2012ம் வருடமே வாபஸ் பெற்ற நிலையில், 11 வருடங்களாக வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மனு நகல் தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனு நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2011 மற்றும் 2023ல் நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, 2011ல் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
+ There are no comments
Add yours