மதுரை: கொள்கை ரீதியாக இருப்பவர்களுக்கு திமுகவில் பிரதிநிதித்துவம் இல்லையா? என, அமைச்சர் மனோ தங்கராஜ் பதவி நீக்கம் குறித்து மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்த நிலையில், பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை கே.கே.நகர் பகுதியிலுள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனோ தங்கராஜை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கியது முற்போக்காளர்கள், மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு திமுக தலைமை பதிலளிக்க வேண்டும். கன்னியாகுமரி பகுதியில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை தடுத்து, குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை திராவிட மாடலாக மாற்றியவர்.
மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகம் எழுதி அவருக்கு எதிராக நிற்பவர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர். அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தபோது மென்பொருள் ஏற்று மதியை 21 சதவீதத்திற்கு அதிகரித்து சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வழி செய்தார். ஆவினில் ஊழலை ஒழித்தார். இதுவெல்லாம் தவறா? மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியிலும், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை பணம் கொடுக்காமல் வெற்றி பெறச் செய்தவர். அவர் செய்த தவறு என்ன? முதல்வர் எதனால் அவரை நீக்கி இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.
கன்னியாகுமரி நெல்லை பகுதிகளில் இருந்து கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்வதை தீவிரமாக எதிர்த்து பெரும்பான்மை குவாரிகளை மூட நடவடிக்கை எடுத்தவர் மனோ தங்கராஜ். பாஜகவினர் மற்றும் கனிமவள கொள்ளையர்கள் கூட்டாக இணைந்து அழுத்தம் தந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
அமைச்சர் நீக்கம் பற்றி திமுகவின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளருக்கு தெரியுமா? மாவட்ட செயலாளர் அல்லது உயர்மட்ட கூட்டத்திலே முடிவு எடுக்கப்பட்டதா? ஆ.ராசாவிற்கோ, பொன்முடிக்கோ இந்த விஷயம் எல்லாம் தெரியுமா? 20 ஆண்டாக கன்னியாகுமரி பகுதியில் திமுகவிற்கு சவாலான இடங்களில் பணிபுரிந்தவருக்கு இந்த முடிவு நேர்ந்திருக்கிறது.
திமுகவிற்காக பல முற்போக்கு இயக்கங்கள் எல்லோரும் களத்தில் பல மாதங்கள் வேலை செய்தோம். மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் ஸ்டெர் லைட் எதிர்ப்பு போராட்டத்தின் வாக்குகளை திமுக அறுவடை செய்துவிட்டு சில கொள்கையாளர்களை நீக்குவது எவ்வித நடைமுறை. நிபந்தனை ஜாமீனிலுள்ள செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் கொள்கையாளர்களை ஆர் எஸ்எஸ், பாஜகவை எதிர்க்கும் கொள்கையாளர், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குவதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்லுகிறீர்கள்.
மதுரையில் பி டி ஆரை டம்மியாக்கி. தற்போது மனோ தங்கராஜூம் நீக்கப்பட்டுள்ளார். தங்கம் தென்னரசுக்கு டம்மியான பதவி கொடுத்திருக்கிறீர்கள். கொள்கை ரீதியாக இருப்பவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என திமுக விரும்புகிறதா? வசூல் செய்து கொடுப்பவர்கள் மட்டும் இருந்தால் போதும் என, நினைக்கிறார்களா?
முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகே இது நடப்பதால் பல சந்தேகங்கள் எழுகின்றன? சனாதனம் அமல், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை இன்றி கொள்கை ரீதியில் செயல்படுவோர் மீது நடவடிக்கை என்பது சரியா?
மனோ தங்கராஜ் சிறுபான்மையினரின் பிரதிநிதி. அவரை நீக்குவதால் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தேவையில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. பாஜகவோடு திமுக நெருங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முற்போக்கு அமைப்புகள், கி. வீரமணி, திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைகள் எல்லோரும் கேள்வியை எழுப்ப வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராசன் முதல் மனோ தங்கராஜ் வரை கொள்கையாளர்களை ஒதுக்குவது திமுகவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும். உதயநிதி சனாதானத்தை எதிர்த்து பேசும் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது சரிதான். கொள்கைவாதிகளை நீக்குவது பற்றி மூத்த அமைச்சர்கள் கேள்வி எழுப்பவேண்டும். இதன்மூலம் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours