சென்னை: மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாட்டை தனக்கு சாதகமாக்க நினைத்த திமுகவின் கனவை, அதிமுக-பாஜக பிரிவு கலைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ளன. பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்ற நோக்கில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி, தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
அதேநேரத்தில், 5 மாநில தேர்தல்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா, 5 மாநில தேர்தலுடன், மக்களவைத் தேர்தலுக்கும் சேர்த்து கட்சியின் நிலைப்பாடுகளை உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில், தமிழகத்தின் அரசியல் களம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் தனித்தனியாகப் போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் திமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக ஆகியவை தலா 2, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேகே தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன. அதேபோல, அதிமுக கூட்டணியில் அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமாகா, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
2024 மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணி வியூகத்துடன் இரு கட்சிகளும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிறுத்தி திமுக சார்பில் இண்டியா கூட்டணிக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைகீழ் மாற்றம்: அதிமுகவைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் மத்தியில் சிறு சிறு கருத்து மோதல்கள் இருந்தாலும், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன்தான் கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல், தமிழக அரசியல் களத்தை தலைகீழாக மாற்றியுள்ளது. பிரிந்த இரு கட்சிகளும் புதிய கூட்டணிகளை எதிர்பார்க்கும் நிலையில், திமுகவின் கனவு கலைந்து, நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, பெரும்பான்மையில் சிக்கல் உருவானால், அதிக எம்.பி.க்களுடன் தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு. ஆனால், தற்போதைய அரசியல் சூழலால், தொகுதிப் பங்கீட்டில், கூடுதல் இடங்களை விட்டுக் கொடுக்கும் நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் தனது கட்சியினரை நிறுத்திவிட்டு, காங்கிரஸுக்கு 5 அல்லது 7 தொகுதிகளைத் தந்து, இதர கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளை வழங்கும் திட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், அதிமுக தற்போது பாஜகவை வெளியேற்றிவிட்டு, புதிய கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது. அதேபோல, அதிமுகவை தவிர்த்து, இதர கட்சிகளை சேர்த்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலைவிட காங்கிரஸ் கூடுதலாக 5 தொகுதிகளையும், இதர கட்சிகள் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளையும் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி முறிவு, இந்தக் கட்சிகள் தங்கள் தேவையை கேட்டுப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவை விமர்சிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளில் சில, தங்களின் கூட்டணி தொடர்பாக மவுனம் சாதித்து வருகின்றன. இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுடன் மநீம கூட்டணி: இதைத் தவிர்க்கவே, அதிமுக-பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்று திமுக தலைவர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மநீம கூடுதல் இடங்களைக் கேட்கும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தற்போதைய நிலை குறித்துப் பேச திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக விரைவில் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
+ There are no comments
Add yours