திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் அருகே ரூ.30.15 கோடியில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையமானது இடநெருக்கடிக்கு தீர்வு கொடுக்குமா? என்ற கேள்வி பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே எழுந்துள்ளது.
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. ‘ஆன்மிகப் பூமி’ என பக்தியுடன் அழைக்கப்படும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல மடங்கு பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துவிட்டதால் இட நெருக்கடியில், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் திணறுகிறது.
இப்பேருந்து நிலையம், சுமார் 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்டது. சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, திருப்பூர், சேலம், கோவை, தருமபுரி, திருப்பதி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருக்கோவிலூர், சிதம்பரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
மேலும், மாவட்டத்தை உள்ளடக்கிய ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகளும் மற்றும் உள்ளூர் (டவுன்) பேருந்துகளும் கணிசமாக உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளின் பேருந்துகளும் வந்து செல்கின்றன. ஒரே நேரத்தில் 80 முதல் 100 பேருந்துகள் நிறுத்தப்படுவதால், மத்திய பேருந்து நிலையம் ஸ்தம்பித்துவிடுகிறது.
வழியிலேயே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுவதால், பேருந்துகள் உள்ளே வருவதிலும், வெளியே செல்வதிலும் சிக்கி திணறுகின்றன. கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவல நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை அமைத்து இடநெருக்கடி சமாளிக்கப் படுகிறது.
இதனால், விசாலமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என எண்-110 விதியின் கீழ் அதிமுக ஆட்சியில் அறிவிப்பு வெளியாகியும், வடிவம் பெறவில்லை. இதற்காக பல கட்ட ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர்கள், அப்போதைய அமைச்சர்கள் மேற்கொண்டும், இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்றப்பட்டதும், புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்ளூர் அமைச்சரான பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் அருகே டான்காப் நிறுவனம் இயங்கி வந்த சுமார் 6 ஏக்கர் நிலத்தில் ரூ.30.15 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
இருப்பினும், புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலையில் நடைமேடை அமைக்கப்படுகிறது. உள்ளூர் (டவுன்) பேருந்துகளுக்கு தனி இடம் ஒதுக்கவில்லை. தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன் உள்ளூர் பேருந்துகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் ஏற்கெனவே செயல்படும் மத்திய பேருந்து நிலையத்துக்கும் புதிய பேருந்து நிலையத்துக்கும் பெரியளவு வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. புதிய பேருந்து நிலைய பணியை ஆய்வு செய்தபோது, அமைச்சர் எ.வ.வேலு சுட்டிக் காட்டியதால், அருகாமையில் உள்ள அரசு இடத்தில் கூடுதலாக பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பேருந்துகள் காத்திருக்கும் இடமாக அமைகிறது.
மேலும், பயணிகள் நடந்து செல்லும் இடமும் மிகக் குறுகலாக உள்ளது. கடைக்காரர்கள் வழக்கம்போல், தங்களது கடையை 2 அல்லது 3 அடி வரை முன்னே கொண்டு வந்துவிட்டால், ஒற்றையடி நடைபாதையாக மாறிவிடும். நவீன வசதியுடன் கூடிய பயணிகள் தங்கும் அறைகள் என வர்த்தக ரீதியாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இட நெருக்கடிக்காக ரூ.30.15 கோடியில் அமையும் புதிய பேருந்து நிலையம், இடநெருக்கடிக்கு தீர்வு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரயில்வே மேம்பாலம் உள்ளதால், பேருந்துகள் உள்ளே நுழைந்து வெளியேறும்போது, கவனத்துடன் ஓட்டுநர்கள் செயல்பட வேண்டும். பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நகரம் மற்றும் அண்ணாமலையார் கோயிலுக்கு வர வேண்டும் என்றால், ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.
ரயில்வே மேம்பாலத்தில் பயணிகள் நடந்து செல்வதற்கு வசதிகள் இல்லை. இதனால், ரயில் தண்டவாளங்களை பக்தர்களும், பொதுமக்களும் கடந்து செல்வது சாதாரண நிகழ்வாக இருக்கும். பவுர்ணமி கிரிவல நாட்களில், ரயில் தண்டவாளத்தை கடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதற்கு மாற்றுத்தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
+ There are no comments
Add yours