வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கடந்த நவம்பர் 30 அன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தவெக தொண்டர்கள் செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (டிச.4) சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்துக்கு கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. திமுக, அதிமுக, பாஜக என முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ போல தன்னுடைய இடத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களை இழுத்தடிப்பது நியாயமா என்ற குரல்கள் எழுந்தன. சில விஜய் ரசிகர்களே கூட இந்த விஷயத்தில் விஜய் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவும் செய்தனர்.
வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு விஜய் நேரில் சென்றால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அதனால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் என்றும், வேண்டுமென்றே மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்களை செட் செய்து பிரச்சினை செய்யலாம் என்று பலவகையான சமாளிப்பு கருத்துகளை தவெக தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
கூட்டம் கூடும், பிரச்சினை ஏற்படும் என்ற இதே காரணத்தை விஜய்யால் தேர்தல் காலத்தில் சொல்ல முடியுமா? பிரச்சாரத்தை இதேபோல தன்னுடைய அலுவலகத்தில் மட்டுமே வைத்து நடத்த முடியுமா என்ற எதிர்வினைகளும் எழாமல் இல்லை.
தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தற்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பேரிடரோ அல்லது பிரச்சினையோ மக்களை நேரடியாக சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இப்படி தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து எப்போதும் ஆறுதல் கூறியதில்லை.
இவ்வளவு ஏன்… விஜய்யின் தவெக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா, மற்ற கட்சியினரே பாராட்டும் அளவுக்கு மழை பாதிப்பு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு அசத்தியுள்ளார். நவம்பர் 21-ம் தேதி ஒரே நாளில் ராமேசுவரத்தில் 44 செ.மீ, அளவுக்கு பேய்மழை கொட்டித் தீர்த்தது.
எதிர்பாராத இந்த மழையால் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரப் புள்ளிகள் சம்பிரதாய சடங்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண முகாம்களில் இருந்த மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால், மலர்விழி ஜெயபாலா இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி மீனவ குடிசைகளுக்குள் இருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சுமார் 200 பேருக்கு உணவு வழங்கியதுடன், மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.30 ஆயிரத்தை வழங்கினார் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.
மழை பாதித்த இடங்களுக்கு விஜய் நேரடியாகச் செல்லாவிட்டாலும் கூட, “ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின்போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா?
எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க்கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும்” என்று ஆவேசமாக அறிக்கையை வெளியிட விஜய் தவறவில்லை.
இந்தக் கருத்துகளை எல்லாம் கள நிலவரத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் நேரடியாக கூறினால், அதுதான் மக்களுக்கான அரசியல் குரலாக இருக்கும் என்ற கருத்துகளையும் பல்வேறு கட்சியினர் முன்வைக்கின்றனர்.
“புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பாஜக எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு. அரசியல் களம் என்பது வேறு. தவெக மாநாடு நடந்த அக்டோபர் 28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார்” என்று சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு உடனடியாக அறிக்கைவிட்டு எதிர்வினையாற்றிய தவெக, “அண்ணமலை பேசியது விளம்பர உத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழகம் திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம்” என்று சாடியிருந்தது. ஆனால், அண்ணாமலையின் அந்தக் கூற்று இப்போது விஜய்யின் ‘நிவாரணம் ஃப்ரம் ஹோம்’ முறை மூலம் நிரூபணம் ஆகிவிட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
தன்னை மாற்று அரசியலின் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் தவெக தலைவர் விஜய், சமூகப் பிரச்சினைகளுக்கு வெறும் அறிக்கைகளையும், எக்ஸ் பதிவுகளையும் விட்டுக் கொண்டிருப்பது, பாதிக்கப்பட்ட மக்களை கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவது என இல்லாமல் இனி வரும் காலங்களில் களத்தில் இறங்கி செயல்பட்டால் மட்டுமே மக்கள் மனதில் நீண்டகாலம் நிலைத்து நிற்க முடியும் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருக்கிறது.
+ There are no comments
Add yours