கூட்டணி இல்லை என மீண்டும் உறுதிப்படத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

Spread the love

பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்துவந்த அதிமுக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பேசிய பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கூட்டணியை விட்டு வெளியேறியது. அதையடுத்து இரு கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி தமிழ்நாட்டில் தேவை என்பதனால் அதிமுகவினரை எதிர்த்து கருத்துக்கள் எதுவும் கூற வேண்டாம் என்று பாஜக மேலிடம் கட்சியினரைக் கட்டுப்படுத்தி வைத்தது. அதைத்தொடர்ந்து இரண்டு தரப்பிலும் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்தன.

ஆனால் பாஜகவுடன் இந்த தேர்தலில் மட்டுமல்ல அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட கூட்டணி கிடையாது என்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணியின் தேவையை உணர்ந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மூலமாக தூது அனுப்பியதுடன், தமிழ்நாட்டில் அதிமுகவுக்காக கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று நேரடியாக அழைப்பும் விடுத்தார்.

அதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் எங்கள் கதவை சாத்தி விட்டோம் என்று பதில் அளித்தார். ஆனாலும் பாஜக தரப்பில் முயற்சிகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிபட கூறுகிறேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதிமுக மக்களை நம்பியே இருப்பதாகவும், ஆனால் கூட்டணியை நம்பியே திமுக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் பாஜகவுடன் அதிமுக மீண்டும் இணையலாம் என்ற பேச்சுக்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் நான்கு முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours