சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை குறித்த அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டதைடுத்து விரைவில் ஓபிஎஸ்ஸுக்கான இருக்கை மாற்றப்படும் என தெரிகிறது.
அதிமுகவில் நடந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகரிடம் அதிமுக சார்பில் இதுகுறித்து பல முறை கடிதமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சபாநாயகர் இதனை கண்டு கொள்ளவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் வழியிலேயே இப்போதும் நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதாக அதிமுகவுக்கு அவர் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தநிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கும் பட்சத்தில் ஓ.பி.எஸ்ஸின் இருக்கை மாற்றப்படும்.
முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒரு இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படக்கூடும் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours