பக்கிங்காம் கால்வாயில் வந்த வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்திருந்தது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. மழை நின்று 4 நாட்களாகி விட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.
மறுபுறம் சென்னையின் நகர் பகுதிகளான, வட சென்னை பகுதியில் மக்கள் மின்சாரம், குடிநீரின்றி தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை திருவள்ளூரில் பெய்யும் கனமழைக்கு வடிகாலாக செயல்படுவது கொசஸ்தலை ஆறுதான்.
இப்படி இருக்கையில் கடந்த 4-ம் தேதி அதிக அளவு மழை பெய்ததால் இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது, இதனால், எண்ணூர், மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
அத்துடன், இந்த பகுதிகளில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெள்ளம் புகுந்தது. இந்நிறுவனங்கள் மழைநீரை வெளியேற்றும்போது அத்துடன் சேர்ந்து கச்சா எண்ணெய்யும் வெளியேறியிருக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் கச்சா எண்ணெய் சூழந்ததால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர். இதனால் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இது எரியும் தன்மை கொண்டதால் மக்கள் வீடுகளில் சமைக்கவே அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் தொடங்கியது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக ஆய்வு செய்து நாளை பதிலளிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
+ There are no comments
Add yours