சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ₹1817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1817.54 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் JICA நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு 11.09.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ, சீனிவாச நகர் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மெட்ரோ மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை மெட்ரோ என ஐந்து சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்கு மற்றும் கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், U-பிரிவு கொண்ட பாதைகள் மற்றும் சாய்வு பாதைகள் போன்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் திட்டம் கட்டம் 2-ல் மூன்று வழத்தடங்களில் 116.1 கி.மீ நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 100% நிறைவுப்பெற்றுள்ளது.
+ There are no comments
Add yours