சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரப்படுத்துமாறு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வார்டுகளை உருவாக்குவதோடு, தேவையான அளவு ரத்தத்தையும் கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பத்தாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடலில் உப்பு அதிகமாக இருந்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours