கோடை காலத்தில் கண்மாய்களில் தண்ணீர் வற்றிச் சுருங்கிவிட்டால், அதிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக மீன்பிடி திருவிழா நடத்தப்படும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மீன்களை பிடிக்கலாம் என்பதால் இதை, ‘அழி கண்மாய்’ என்றும் அழைப்பதுண்டு.
அந்தக் காலத்தில் அழி கண்மாய் என்று சொல்லப்பட்டதைத் தான் இப்போது மீன்பிடி திருவிழா என்கிறார்கள். அப்படி சிவகங்கை அருகே மழை, விவசாயம் செழிக்க வேண்டி இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து அள்ளிச்சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது துவார் கிராமம். இங்குள்ள வள்ளிக் கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான திருவிழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்மாய்க் கரையில் காலையிலேயே குவிந்தனர்.
கோயிலில் சாமி கும்பிட்டு வழிபாடு நடத்திய பிறகு ஊர் பெரியவர்கள் வெள்ளைக்கொடி அசைத்து மீன்பிடி திருவிழாவைத் துவக்கி வைத்தனர். கொடி அசைத்ததுமே மின்னல் வேகத்தில் கையில் மீன்பிடி உபகரணங்களுடன் கரையில் காத்திருந்த மக்கள் கண்மாய்க்குள் துள்ளிக் குதித்து ஓடி மீன்களை பிடிக்கத் தொடங்கினர். பாரம்பரிய முறையில், வலை, பரி, கச்சா, தூரி ஆகியவற்றைக் கொண்டு மீன்களை பிடித்தனர்.
தங்கள் கையில் சிக்கிய சிசி, போட்லா, கட்லா, விரால், ஜிலேபி, அயிரை, கெண்டை என வகை வகையான மீன்களை சாக்குப் பை, கூடை மற்றும் பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். வருடந்தோறும் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் சூழலில் வள்ளிக் கண்மாயில் இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் மீன்களைப் பிடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
+ There are no comments
Add yours