பணிப்பெண்ணை சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக பதிவான வழக்கு தொடர்பாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது பெண் வேலை செய்து வந்தார். அந்தப் பெண்ணை மதிவாணனும், மெர்லினும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அந்தப் பெண் அளித்த புகாரை போலீஸார் பதிவு செய்யாத நிலையில், அந்த பெண் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், எம்எல்ஏ-வின் மகனும் மருமகளும் தன்னை அடித்து துன்புறுத்தியதோடு, சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் எம்எல்ஏ-வின் மகன், மருமகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேசமயம், திமுக எம்எல்ஏ கருணாநிதி, இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவல் துறையினர் தன் மகன், மருமகள் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆன்ட்ரோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினும் கைதுக்குத் தப்பி தலைமறைவாகினர். தற்போது இருவரும் தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசும் ஆடியோக்களும் வெளியாகி வருகிறது. இதுமேலும், சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எம்எல்ஏ-வின் மகனுக்கும் மருமகளுக்கும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
+ There are no comments
Add yours