கோவை மருதமலை கோயில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் போற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இங்கு வருகை தருகின்றனர். இங்கு மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்ல சுமார் 900 படிக்கட்டுக்கள் கொண்ட பாதை ஒன்றும், வாகனங்கள் செல்ல வக மலைப்பாதை பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த மலைப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள், கார்கள் இயக்கப்படுகிறது. குறுகலான பாதை என்பதால் கன ரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக, மினி பேருந்து சேவையும் இயக்கப்படுகிறது.
இதற்காக் அடிவாரத்தில் பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வனப் பகுதியை ஒட்டி மருதமலை அமைந்திருப்பதால், இந்த மலைப்பாதைகளில் வனவிலங்குகள் கோயில் படிக்கட்டுகள் மற்றும் சாலை வழியாக கடந்து செல்வது வழக்கம்.
எனவே கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மலை அடிவாரம், படிக்கட்டுகள், கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மருதமலை கோயில் வளாகம் அருகே ஒரு சிறுத்தை சாலையைக் கடந்து சென்றது. அந்த வழியாக சென்ற பக்தர் ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதமலையில் இரவு பக்தர் ஒருவர் காரில் செல்லும் போது மலைப்பாதையில் முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. இதனை அவர் படம் பிடித்து வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மருதமலை கோயிலில் மீண்டும் சிறுத்தை தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள வனத்துறையினர் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளின்படி மட்டுமே வாகனங்களை மலைப்பாதையில் இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளதால், அடிவாரம் அருகே வசிக்கும் பொதுமக்கள், கடைகள் வைத்திருப்போர் அச்சத்தில் உள்ளனர்.
+ There are no comments
Add yours