முன்விரோத தகராறில் கொலை, 20 பேருக்கு ஆயுள் தண்டனை!

Spread the love

விழுப்புரம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கண்ணாரப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் குலசேகரன். இவரது வீட்டின் அருகில் புறம்போக்கு நிலம் இருந்துள்ளது. இதனை அனுபவிப்பது தொடர்பாக இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நக்கீரன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நக்கீரன் மற்றும் சேகர் ஆகியோர் போட்டியிட்டு உள்ளனர். அப்போது சேகர் தரப்புக்கு ஆதரவாக குலசேகரன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மேலும் முன்விரோதம் வளர்ந்துள்ளது.

இந்த நிலையில் நக்கீரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 26 பேர் சேர்ந்து குலசேகரனை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனை தடுக்க முயற்சித்த குலசேகரனின் உறவினர் காத்தவராயன் என்பவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக குலசேகரனின் சகோதரர் திருநாவுக்கரசு திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் 26 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் போது பழனிவேல், தமிழ்மணி, அருள், மோகன், அர்ஜுனன், கண்ணன் ஆகிய 6 பேர் உயிரிழந்து விட்டனர். சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ராஜசிம்மவர்மன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரிழந்த 6 பேர் நீங்கலாக மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் குற்றவாளிகள் 20 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகள் பெயர்கள் பின்வருமாறு: 1.நக்கீரன் 2.கோவிந்தராஜ் 3.சிவபூஷ்ணம் 4.புகழேந்தி 5.மணவாளன் 6.ராஜேந்திரன் 7.குமரவேல் 8.மார்க்கணடேயேன் 9.சுதாகர் 10.முரளி 11.கணகராஜ் 12.கோகன்(காவலர்) 13.சிவாநாதன் 14.பிரபு 15.காளி 16.மணி 17.பாரி 18.பார்த்திபன் 19.சபரிநாதன் (பொதுப்பணித்துறை ஊழியர்) 20.மாதவன்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours