வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் (பிப்ரவரி 27) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த போராட்டம் குறித்து பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறையில் பணிப் பாதுகாப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14,000 ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொது நிர்வாகத்தில், குறிப்பாக தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours