எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என நாடெங்கும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அதானி டோட்டல் எனர்ஜிஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
எலெக்ட்ரிக் வாகனங்கள் புதிய எழுச்சியாக சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. எகிறும் எரிபொருள் விலை உயர்வு, சவாலாகும் சூழல் மாசுபாடு ஆகியவை பெட்ரோலிய வாகனங்களுக்கு மாற்றான எலெக்ட்ரிக் வாகனங்களை வரவேற்று வருகின்றன. அரசும் அதற்கான சலுகைகளை அறிவித்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத் தேர்வில் எலெக்ட்ரிக் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் உபயோகத்தில், அதற்கான சார்ஜிங் நிலையங்கள் சவாலாக நீடிக்கின்றன. இதர எரிபொருள் நிலையங்கள் போல குறிப்பிட்ட கிமீ தொலைவுக்கு ஒன்றாக இ-சார்ஜிங் நிலையங்கள் இருப்பதில்லை. இந்த குறையை போக்கும் நோக்கில் ஆனந்த் மஹிந்திராவின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அதானி குழுமத்தின் அதானி டோட்டல் எனர்ஜிஸ் துணை நிறுவனமான அதானி டோட்டல் எனர்ஜிஸ் இ-மொபிலிட்டி லிமிடெட் ஆகியவை கைகோத்துள்ளன.
இந்த இணைப்பின் மூலம், மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 வாடிக்கையாளர்கள் தங்களது ப்ளூசென்ஸ்+ செயலி மூலம் 1100க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை எளிதில் அணுகலாம். இது மஹிந்திரா மட்டுமன்றி பிற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் அணுகலையும் சாத்தியமாக்க வாய்ப்பு தந்துள்ளது. நாட்டில் இ-சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தக் கூட்டணி ஒரு மைல்கல் சாதனையை படைத்துள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த கூட்டணி இந்தியாவில் இ-வாகன பயன்பாட்டினை இலகுவாக்குவதோடு, போட்டி நிறுவனங்கள் கூடுதல் சார்ஜிங் நிலையங்களை திறக்கவும் தூண்டியுள்ளது. மேலும் வர்த்தக நோக்கங்களுக்கு அப்பால் இவை கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலாகவும், இந்தியா அதன் காலநிலை நடவடிக்கை இலக்குகளை அடைவதிலும் வாய்ப்பளித்துள்ளது.
+ There are no comments
Add yours