மும்பை பங்குச்சந்தையில் இன்றைய தினம் வர்த்தகம் தொடங்கிய சூட்டில், 15 நிமிடங்களில் ரூ.5 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல், இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்ததில் இந்த இழப்பு நேரிட்டுள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரானின் பெரும் அளவிலான ட்ரோன் தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கில் எழுந்துள்ள பதற்றம், உலக அளவில் பங்குச்சந்தைகளை பதம் பார்த்துள்ளது. இவற்றுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வகையில், இன்றைய தினம் வர்த்தகம் தொடங்கிய சூட்டிலேயே, முதல் 15 நிமிடங்களில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சரசரவென 800 புள்ளிகள் சரிந்தது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 190 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை 73,468 என்றளவிலும், தேசிய பங்குச்சந்தை 22,330 என்றளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. இவற்றில் மும்பை பங்குச்சந்தையில் மட்டும் முதலீட்டாளர்கள் தங்களது ரூ.5 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது குறிவைத்து பெருமளவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. முன்னதாக சிரியாவில் செயல்பட்ட ஈரான் தூதரகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரான் ஜெனரல்கள் இருவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். 2 வார இடைவெளியில் அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ராணுவத் தாக்குதலை தொடங்கியது.
இதுவரை காசாவின் ஹமாஸ், லெபனானின் ஹெஸ்பொல்லா ஆகிய போராளிக் குழுக்கள் வாயிலாக இஸ்ரேலுடன் மறைமுகமாகப் போரிட்டு வந்த ஈரான், முதல் முறையாக நேரடித் தாக்குதலை தொடர்ந்துள்ளது. தங்களை குறிவைத்து பாய்ந்த 300க்கும் மேற்பட்ட ஈரானின் ட்ரோன்களில், 99 சதவீதத்தை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் எழுந்துள்ள இந்த பதற்றம் காரணமாக ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் திங்களன்று பெரும் தள்ளாட்டத்தை எதிர்கொண்டன. ஜப்பானின் நிக்கி 1 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது. அதே போன்று ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 குறியீடு 0.6 சதவீதத்துக்கும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 0.8 சதவீதத்துக்கும் மேலாக சரிவு கண்டது. இவற்றின் எதிரொலியாகவே, இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை முதல் சரிவு கண்டதில், முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளன.
+ There are no comments
Add yours