ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா காரணமாக நொடிந்து போயிருந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் , தற்பொழுது மெல்ல மெல்ல சீராகிக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பின்னலாடை தொழிலில் வங்கதேசத்தின் திடீர் எழுச்சி மீண்டும் திருப்பூரை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விடுமோ என்று நிறுவனங்கள் அச்சப்படுகின்றன. தீபாவளி பண்டிகை கடந்து சென்றிருக்கும் இந்த சூழலில் திருப்பூரின் தற்போதைய நிலைமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பூர்: பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் பிரசத்தி பெற்ற நகரமாக இருப்பது திருப்பூர். சுமார் 1925ஆம் ஆண்டுகளில் காதர்பேட்டையில் உள்ள நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்குவதற்கு, திருப்பூரை சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் மற்றும் சத்தார் சாகிபு ஆகியோர் சென்ற போது, கையினால் சுற்றி துணி தயாரிக்கும் இயந்திரம் மற்றும் அவர்கள் துவங்கிய பின்னலாடை நிறுவனம் தான், திருப்பூரில் தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் என திருப்பூர் வாழ் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், பல்லடம் தாலுகாவில் சிறிய ஊராக இருந்த திருப்பூர், தொழிற்சாலை வளர்ச்சியால் தற்போது தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் வளர்ந்துள்ளது. இவ்வாறாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த தொழில்களான சாயமிடும் டையிங் தொழில், பிரிண்டிங் தொழில், எம்ப்ராய்டரி தொழில், ஸ்டீமிங், காம்பாக்டிங் உள்பட 95 சதவீத தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
இப்படி ஒரே ஊரில் பனியன் உற்பத்தி சார்ந்த தொழில்கள் குவிந்து உள்ளதால், திருப்பூரில் பின்னலாடை தொழில் பெரிய அளவில் வளர சாதகமாக அமைந்தது. ஆனால் தற்போது திருப்பூரின் பனியன் தொழிலுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. கரோனா பேரிடர் காலங்களுக்கு பின்னர் கஷ்டப்பட்டு மீண்டு வந்த பனியன் தொழில், தற்போது நூல் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர், வங்கதேசத்தின் தொழில் எழுச்சி போன்ற பிரச்சினைகள் காரணமாகவும், மேற்கத்திய நாடுகளில் மக்களிடம் ஆடை வாங்கும் சக்தி குறைவு போன்றவையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதியில் பெரிய முட்டுக்கட்டையை போட்டு முடக்கி உள்ளது.
ஏற்றுமதிதான் கவலையளிக்கிறது என்றால், திருப்பூர் மாநகரத்தில் சில்லறை வியாபாரம் செய்து வரும், சிறு முதலீட்டாளர்களின் நிலை அதை விட பரிதாபகரமாய் இருக்கிறது.
திருப்பூர் திருமலை நகரில் பத்து வருடங்களாக ரீடெய்ல் கடை நடத்தி வரும் குணசேகரன் கூறும்போது..
‘திருப்பூரில் பெரிய ஷோ ரூம்களுக்கு மத்தியில் சில்லறை விற்பனை செய்வது கடினமாகத்தான் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தள்ளுபடி என்ற பெயரில் நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்து விடுகிறார்கள். அதே தரத்திலான ஆடைகளைதான் நாங்களும் விற்பனை செய்கிறோம். ஆனாலும் எங்களை போன்ற சிறிய முதலீட்டாளர்களால் சுலபமாய் விற்பனை செய்துவிட முடிவதில்லை. ஷோ ரூம்களில் சொன்ன விலைக்கு வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள், எங்களிடம் பேரம் பேசுகிறார்கள். மேலும் ஆன்லைன் கலாச்சாரம் அதிகரித்து விட்டதால், எங்களை போன்ற சிறு கடைகளை நாடி வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு கூட ஓரளவுக்குத்தான் வியாபாரம் ஆகிறது. கொள்முதல் மற்றும் நிர்வாக செலவுகளை தாண்டி பெரிதாக லாபம் சம்பாதிக்க முடிவதில்லை.’ என்றார்.
குமாரனந்தபுரத்தில் பதினைந்து வருடங்களாக பின்னலாடை துறையின் சார்பு தொழில்களில் ஈடுபட்டு வரும் ராஜா என்பவரை சந்தித்தோம். அவர், தீபாவளி சீசன் ஓரளவுக்கு கை கொடுத்திருப்பதாக கூறினார். மேலும்,
‘திருப்பூர் என்ற கடலில் திமிங்கலங்கள் மட்டுமல்ல.. எங்களை போன்ற குட்டி மீன்களும் வாழத்தான் செய்கிறது. கொரோனா காலகட்டத்தில் இருந்த சிரமங்கள் எல்லாம் இப்போது இல்லை. திருப்பூரின் டர்ன் ஓவர் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் கிட்டத்தட்ட முப்பத்து நான்காயிரம் கோடிகள் புழங்கியிருக்கிறது. உக்ரைன்- ரஷ்யா போர் முடிவுக்கு வந்ததும் நிலைமை இன்னும் மாறும். எத்தனை வங்க தேசங்கள் வந்தாலும் பின்னலாடை துறையில் திருப்பூரை அடித்துக்கொள்ள முடியாது’ என்றார்.
தொழில் வளர்ச்சிக்கேற்றவாறு திருப்பூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக 17 வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இதில் அடங்குவர். சில சமயங்களில் சச்சரவுகள் எழுந்தாலும், திருப்பூர் தங்கள் வாழ்வியலுக்கு சவுகரியமாக இருப்பதாகவே பல வட மாநில தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
15 வருடங்களாக திருப்பூரில் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கவ்ரவ் என்பவரை சந்தித்தோம்.
‘நான் நான்காயிரம் சம்பளத்தில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். தற்பொழுது இருபத்து ஒன்றாயிரம் ரூபாய் வாங்குகிறேன். எங்கள் ஊரை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது நல்ல சம்பளம்தான். இந்த சம்பளத்தை வைத்துதான் ஊரில் இருக்கும் எனது குடும்பம் ஓரளவிற்கு நிம்மதியாய் நகர்கிறது. தமிழ் மக்களும் பழகுவதற்கு எளிமையாக இருக்கிறார்கள். உண்மையிலேயே தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் இடம்தான் ‘ என்று கூறினார். ஆனாலும் BF மற்றும் போனஸ் தருவதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருப்பூர் என்ற ஊரை நம்பி ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், லட்சக்கணக்கான குடும்பங்களும் இருக்கிறது. வரிகளும், அவ்வப்போது ராக்கெட் வேகத்தில் உயரும் நூல் விலைகளும், தொழிலாளர் பிரச்சினைகளும் இல்லாவிடில் திருப்பூர், உலகின் தலைசிறந்த தொழிற் பூங்காவாய் மிளிரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை ! அது நமது ஆட்சியாளர்களின் கையில்தான் இருக்கிறது !
+ There are no comments
Add yours