சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 குறைந்துள்ளது. கடந்த 31ம் தேதி தீபாவளி நாளன்று ஒரு சவரன் தங்கம் ரூ.59,640 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபாவளி மறுநாளான நவம்பர் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்கப்பட்டது.
மேலும் கடந்த 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,355க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு இன்று ரூ. 165 குறைந்து ரூபாய் 7 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது. இதனால், தங்கம விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூபாய் 1320 குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனையாகி வருகிறது.
+ There are no comments
Add yours