சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (ஜூலை 24) குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6490-க்கு விற்பனையாகிறது. அதன்படி, பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.51,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.
முன்னதாக நேற்று பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கும், பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது வியாபாரிகள், நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.55,240 வரை..! சமீப காலமாக தங்கத்தின் விலை கடுமையான ஏற்றத்தைக் கண்டுவந்தது. மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 வரை அதிகரித்து விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்து வருவதைக் கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது.
மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். இந்த வரி குறைப்பு மூலம், வியாபாரிகளுக்கு தங்கம் விற்பனை அதிகரிக்கும். அத்துடன், பொதுமக்களும் விலை குறைப்பால் தங்கம் வாங்குவதோடு, தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் தங்கம் கடத்தலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இறக்குமதி வரி குறைப்பின் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் கணிசமான அளவுவரை நீடிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours