கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
இம்மாதம் 6-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,920-க்கு விற்பனை ஆனது. பின்னர், மீண்டும் தங்கம் விலை ஏற தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.58,280-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. இதன்படி, தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.62,312-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை குறைவு: ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.1 குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக உள்ளது.
+ There are no comments
Add yours