சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,420-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.51,360-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரியத் தொடங்கியது.
பட்ஜெட் தாக்கலான கடந்த ஜூலை 23 முதல் 26 வரை தொடர்ந்து 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) சற்றே உயர்ந்தது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் இந்த வாரம் திங்கள் (ஜூலை 29), செவ்வாய் (ஜூலை 30) கிழமைகளில் தொடர்ந்து விலை குறைந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ஒரு பவுன் ரூ.51.080-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (ஜூலை 31) மாதத்தின் கடைசி நாளில் தங்கம் விலை சற்றே உயர்ந்து பவுனுக்கு ரூ.51,360-க்கு விற்பனையாகிறது.
+ There are no comments
Add yours