சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.150 ஆக குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400 வரை உயர்ந்தது. சில்லறை விற்பனை சந்தைக்களில் கிலோ ரூ.450 வரை விற்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை காரணமாக உற்பத்தி இல்லாதது, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டது போன்ற காரணங்களால் அதன் விலை உயர்ந்தது.
இந்நிலையில், நேற்று கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.150 ஆக குறைந்துள்ளது. இதேபோன்று ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.20 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.30-லிருந்து ரூ.20 ஆகவும் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.40, பீட்ரூட், கேரட், பீன்ஸ், சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.22, வெண்டைக்காய், மாங்காய், நூக்கல், பாகற்காய் தலா ரூ.20, கத்தரிக்காய் ரூ.15, முட்டைகோஸ் ரூ.12 என விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக எல்லையை ஒட்டி ஆந்திரா, கர்நாடக மாநில பகுதிகளில் புதிய இடங்களை தேடி முருங்கைக்காய் கொள்முதல் செய்து கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக விலை குறைந்துள்ளது’’ என்றனர்.
+ There are no comments
Add yours