மும்பை: மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரம் மற்றும் ஹெவிவெயிட் பங்குகளான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி நிறுவனப் பங்குகளின் சரிவால் இந்திய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கடும் வீழ்ச்சி நிலவியது. தொடர்ந்து நான்காவது நாளாக வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் வர்த்தக நேரத்தின் இறுதியில் 1,769.19 (2.10 சதவீதம்) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 82,497.10 ஆக இருந்ததது. வர்த்தக நேரத்தின்போது இது 1,832.27 (2.17 சதவீதம்) புள்ளிகள் வரை சரிவடைந்து 82,434.02 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி 546.80 (2.12 சதவீதம்) புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,250.10 ஆக இருந்தது.
தொடரும் அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் ஆகியவை முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மும்பை பங்குச்சந்தையில் எல் அண்ட் டி, ரிலையன்ல் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா வங்கி, டைட்டன், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டிருந்தன. ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றிருந்தது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியிருப்பது, அதற்கான பதிலடிகள் மத்திய கிழக்கில் போர் குறித்த அச்சத்தை உருவாக்கி இருப்பது உள்நாட்டுச் சந்தையை வெகுவாக பாதித்திருக்கிறது. எஃப் அண்ட் ஒ பிரிவுக்கான செபியின் புதிய நெறிமுறைகள் பரந்த சந்தையில் வர்த்தகம் குறைவதற்கான கவலையை அதிகரித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மற்றும் ஆசியப் பங்குச்சந்தைகளில் கலவையான போக்குகளே நிலவுவது. குறிப்பாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்ததும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை: இதனிடையே, சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,880-க்கு என்ற புதிய உச்சத்தில் விற்பனை ஆனது. நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.400 என விலை உயர்ந்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.56,880-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,110-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் முதலீடு செய்வது சற்றே பாதுகாப்பானதாக கருதப்படுவதால் விலையேற்றம் தொடர்கிறது.
+ There are no comments
Add yours