சென்னை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில்ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் மூலம், இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
விண்ணப்பப் படிவம், அடையாள மற்றும் முகவரிச் சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படும்.
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தரபகுதி ஊனம் ஆகியவற்றுக்கு இந்தக் காப்பீடு மூலம் இழப்பீடுவழங்கப்படும். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி, விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை) கிடைக்கும்.
இவை தவிர, விபத்தால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு தலாரூ.1 லட்சம் வரையும், விபத்தால்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும்.
விபத்தால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியை செய்ய ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours