நாமக்கல்: ஓமன் உட்பட வளைகுடா நாடுகளில் கோடை காலம் நீடிப்பதால், அந்நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது சரிவடைந்துள்ளதாக, முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,000க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவை மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கோடை காலம் நிலவுகிறது. எனவே, அந்த நாடுகளில் முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், “மஸ்கட், ஓமன் நாடுகளில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. எனவே அங்குள்ள பள்ளிகளுக்கு தற்போது விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். எனவே, அந்நாடுகளில் முட்டை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனிடையே, மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் முட்டை உற்பத்தி இருப்பதால், அங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் அந்நாட்டு மக்களுக்கு போதுமானதாக உள்ளது.
இதுவும் முட்டை ஏற்றுமதி குறைந்ததற்கு காரணமாகும். அங்கு கோடை காலம் முடிவுக்கு வர இன்னும் ஒரு மாத காலம் ஆகும். அதன்பின்னரே முட்டை ஏற்றுமதி சீரடையும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எனினும், தொலைவு காரணமாக முட்டை ஏற்றுமதியில் சிரமம் நிலவி வருகிறது. மஸ்கட்டில் முட்டை ஏற்றுமதியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த கூட்டத்தில் முட்டை ஏற்றுமதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது,” என்றார்.
+ There are no comments
Add yours