கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வானிலை அறிக்கையின்படி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் 25.11.2023 அன்று செயல்படாது. எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours