தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ், தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்நிலையில், வரும் 25ம் தேதி ஓமன், ஏமன் கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும்பொழுது, தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை தொடங்குவதாக கணிக்கப்பட்ட வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றே (21 அக்டோபர் 2023) துவங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இன்று காலை முதல் சென்னையின் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீன்வர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல்
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல்
மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours