உதகை : நீலகிரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், உதகை தாவரவியல் பூங்காவில் இருந்து ராஜ்பவன் ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலையிலும், அத்திக்கல் சாலையிலும் ராட்சத மரங்கள் வேருடன்சாய்ந்தன. அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மரங்களை வெட்டி அகற்றினர்.
இதேபோல, கூடலூர் தேவர்சோலை 4-வது மைல் அருகே சாலையில் மூங்கில் தூர் விழுந்ததால், போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதே சாலையில், 3-வது மைல்மீனாட்சி பகுதி அருகே கூடலூரில் இருந்து பாடந்துறை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம்மீது மரம் விழுந்தது. இதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற இப்ராஹீம் (32) என்பவர் காயமடைந்தார்.
மேலும், 3-வது மைல் பகுதியில் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை வனப் பகுதிக்குள் சென்ற பின்னரே, வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.
அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ. மழை பதிவானது. இதனால் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டார்.
கோவையில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றுமுதல் வரும் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 26-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 20 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 19 செ.மீ., கூடலூர் சந்தை, கோவைமாவட்டம் உபாசி, சின்கோனாவில் 15 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல்கூடலூரில் 14 செ.மீ., பந்தலூரில் 13 செ.மீ., விண்ட் வொர்த் எஸ்டேட், கோவை மாவட்டம் சோலையாறில் 12 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் வால்பாறையில் 11 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, நீலகிரி மாவட்டம் வுட்பிரையர் எஸ்டேட், பார்வுட் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 8 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வுமைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours