ஆற்று வெள்ளமும், கனமழையும் அசாமில் தொடரும் சோகம்- 38 பேர் உயிரிழப்பு !

Spread the love

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாமில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் 42476.18 ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியுள்ளன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 84 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2208 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் நேமாதிகாட், தேஜ்பூர், குவஹாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்கிறது, அசாமில் உள்ள சுபன்சிரி, படாதிகாட், புர்ஹிடிஹிங், செனிமரி கோவாங்கில், திகோவ், திசாங், தன்சிரி, ஜியா-பரலி, புத்திமாரி, கோபிலி, பெக்கி, குஷியாரா, பராக், தாலேஸ்வரி ஆகிய நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 11.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் திப்ருகாரில் உள்ள ஆற்றங்கரைத் தீவில் சிக்கித் தவித்த 12 மீனவர்கள் விமானத்தின் மூலம் மீட்கப்பட்டனர். நேற்று முதல் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கையின்படி, டின்சுகியா மாவட்டத்தில் இரண்டு பேர் நேற்று உயிரிழந்தனர். தேமாஜி மாவட்டத்தில் ஒருவர் என இதுவரை 24 மணி நேரத்தில் அசாமில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் 489 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கு 2.87 லட்சம் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள், பாலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் ராணுவம், துணை ராணுவப் படைகள், எஸ்டிஆர்எஃப் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. நேற்று மட்டும் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளில் இருந்து 2,900 பேர் மீட்கப்பட்டனர். கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் காண்டாமிருகம் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் பாதிப்படைந்துள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours