பாலஸ்தீனத்தின் மத்திய காசாவில் உள்ள அல்-மகாஸி அகதிகள் முகாமில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் 33 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இஸ்ரேல் தரப்பில் 1400-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரிடையேயான போர் மற்றும் சமீபத்தில் ஈான், இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் போன்றவை அப்பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைத்துள்ளது.
போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய காசாவில் உள்ள அல்-மகாஸி அகதிகள் முகாமில் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள அல்-அக்ஸா மருத்துவமனை முன்பு கொல்லப்பட்டவர்களின் சடலங்களைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கண்ணீர் விட்டு, கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அங்கு மரண அச்சத்துக்கிடையே படுகாயத்துடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரால் தொடர்ந்து கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது உலக நாடுகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு, நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் தாய்மார்கள் ஆவர். ஏராளமான பெண்கள் கொல்லப்பட்டதால் 19 ஆயிரம் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
காசா பகுதியில் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் கடும் பசியை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு உணவு, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை போன்ற எதுவுமின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
அங்கு ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் ஒரு குழந்தை காயமடைகிறது அல்லது உயிரிழக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, காசாவில் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்க முயற்சித்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
+ There are no comments
Add yours