ஐக்கிய அரபு நாடுகளில் வரலாறு காணாத மழை, வெள்ளம்!

Spread the love

ஐக்கிய அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவன பகுதிகளான வளைகுடா நாடுகளில், அவ்வப்போது மழை பெய்வது ஆச்சரியம் என்றாலும், சில நேரங்களில் அதிகப்படியான மழை பொழிவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அவை பெரும்பாலும் செயற்கை மழையாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பொழிந்ததால் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் அருகில் உள்ள பிற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து துபாய், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

துபாய் விமான நிலையம் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு நகரங்களிலும் முழங்கால் அளவு வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், ரயில்கள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் சொகுசு கார்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அவை சேதம் அடையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வீடுகளிலும் கூரைகளில் இருந்து தண்ணீர் வடிவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.

மாறிவரும் காலநிலை காரணமாக இந்த கன மழை பெய்திருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், சேத அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓமன் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours