சேதத்தை சீரமைக்க அவசர ஒதுக்கீடு செய்தது எமிரேட்ஸ்!

Spread the love

கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திக்குமுக்காடிப் போனது. மழை வெள்ளத்தால் சேதமடைந்தவற்றை சீரமைக்க அவசர ஒதுக்கீடாக, அமெரிக்க டாலர் மதிப்பில் 544 மில்லியன் டாலரை அறிவித்துள்ளது.

எண்ணெய் வளத்தால் செழித்திருக்கும் வளைகுடா தேசங்களுக்கு, பாலைவனத்துக்கு அப்பால் மழை என்பது மிகவும் அரிதானது. மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்விக்கும் அளவுக்கு அங்கே மழைப் பொழிவின் நிலை இருந்தது.

ஆனால் இம்முறை அமீரகத்தின் பெருநகர வீதிகளை கனமழை புரட்டிப்போட்டது; தெருக்களை ஆறுகளாக மாற்றியது. விமானங்கள் ரத்தானதில் உலகின் பரபரப்பான துபாய் விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளை முடக்கிப் போட்டது. மழை ஓய்ந்த பிறகு மக்களுக்கு மட்டுமன்றி ஆட்சியாளர்களுக்கும் அதில் பாடங்கள் காத்திருந்தன.

“கடுமையான மழையைக் கையாள்வதில் நாங்கள் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டோம்” என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் கூறினார். குடிமக்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுவதைச் சமாளிக்க இரண்டு பில்லியன் திர்ஹாம்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.

அதிகாரபூர்வமாக மழைப்பொழிவு பதிவு செய்யப்படுவது தொடங்கிய 75 ஆண்டுகளில் இல்லாத மழையை அமீரகம் எதிர்கொண்டுள்ளது. மூன்று பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் ஒரு அமீரக குடிமகன் உட்பட 4 பேர் கனமழைக்கு பலியானதாக தெரிய வந்திருக்கிறது. அமீரக அதிகாரிகள் இன்னமும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை வெளியிடவில்லை என்பதால் இது குறைந்தபட்ச எண்ணிக்கை மட்டுமே.

உள்கட்டமைப்பு சேதத்தை பதிவு செய்வதற்கும், தீர்வுகளை முன்மொழிவதற்கும் கேபினட் அமைச்சர்கள் இரண்டாவது குழுவை உருவாக்கினார்கள். இது தொடர்பாக ஷேக் முகமது வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிலைமை அதன் தீவிரத்தில் முன்னோடியில்லாதது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும் நாடு” என்று இடர்களை எதிர்கொள்ளும் சவாலோடு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

90 சதவீத புலம்பெயர்ந்த மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில், இரண்டு வருடங்களுக்கான மழை ஒருசேர பொழிந்திருக்கிறது. கச்சிதமான நகரம் என்று கூறப்பட்ட துபாய், ஒருசில நாட்களில் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டது. தண்ணீரால் அடைக்கப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

துபாய் விமான நிலையம் 2,155 விமானங்களை ரத்து செய்தது; 115 விமானங்களை திருப்பி அனுப்பியது. சர்வதேச பயணங்கள் இதுவரை இயல்புக்கு திரும்பவில்லை. “சேவைகள் மற்றும் நெருக்கடி நிர்வாகத்தில், நியாயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது மீண்டும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அமீரகத்தின் பிரபல ஆய்வாளர் அப்துல்கலெக் அப்துல்லா நேற்று ட்வீட் செய்திருந்தார்.

தீவிர வானிலை நிகழ்வுகளில் புவி வெப்பமடைதலின் பங்கை மதிப்பிடுவதில் நிபுணரான ஃப்ரீடெரிக் ஓட்டோ கூறுகையில் ”இந்த மழைப்பொழிவு மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்துக்கு உதாரணம்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். தன் வரலாற்றில் முதல் முறையாக பேரிடர் மேலாண்மை குழு அமைத்துள்ளது அமீரகம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours