ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் மறைவை தொடர்ந்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் அமைந்துள்ள அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலுக்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டரில் திரும்பும் போது அதிபர் இப்ராஹிம் ரய்சி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியனும் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதிபர் உயிரிழந்த 50 நாள்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும் என்பது ஈரான் அரசியலமைப்பு சட்ட விதி.
அதன்படி, ஈரான் நிர்வாகத் தலைவர், நாடாளுமன்றத் தலைவர் மற்றும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் ஆலோசனை நடத்தி அதிபர் தேர்தலுக்கான தேதியை உறுதி செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மே 30 முதல் ஜூன் 3-க்குள் மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், ஜூன் 12 முதல் 15 நாள்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours