மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர் ஆனார் கிளாடியா ஷீன்பாம் !

Spread the love

அகாபுல்கோ: மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது. தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவர், தனக்கு வாழ்த்து சொல்லி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” என கிளாடியா ஷீன்பாம் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (ஜூன் 2) அன்று அதிபர், 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.

தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக புள்ளிவிவர மாதிரி ஒன்றை அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய பிரதமர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வழியில் கிளாடியாவின் ஆட்சிக் காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாடியா ஷீன்பாம்: 61 வயதான அவர் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என தெரிகிறது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளார். காலநிலை விஞ்ஞானி. மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours