இயக்குநர் தங்கர்பச்சானின் ‘அழகி’ திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஹிட்டடித்த படங்களை மறுவெளியீடு செய்யும் டிரெண்ட் இப்போது பரவலாக இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெறுகிறது. இந்த டிரெண்டில் ஐக்கியமாகி இருக்கிறது ‘அழகி’ திரைப்படம். மார்ச் 29 அன்று திரையரங்குகளில் இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்பதை இயக்குநர் தங்கர்பச்சான் அறிவித்துள்ளார்.
முதல் காதலின் நினைவுகளைப் பேசும் இத்திரைப்படம், இக்கால தலைமுறையினரை மகிழ்விக்க மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது என தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வலம் வந்த தங்கர்பச்சான் முதல் முறையாக எழுதி இயக்கிய திரைப்படம் ’அழகி’. 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளிவந்தது. தங்கர்பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தானெழுதிய ’கல்வெட்டு’ எனும் சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார். இளையராஜாவின் இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்தது.
முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது. முதல் காதல் சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும், பள்ளிக்காலத்தின் முதல் காதல், வாழ்வில் எப்போதும் உடன் வரும். அப்படி முதல் காதலியை தனக்கு திருமணம் ஆன பின்னர் ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை. எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டது. அப்படியான இந்தப் படம் ரீ-ரிலீஸ் ஆவது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours