நீதிபதியை ‘பாஸ்’ என்று அழைத்த நடிகர் விஷால்- கண்டித்த நீதிமன்றம்.

Spread the love

சென்னை: லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்ததால், அதிருப்தியடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும் என்றும், மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகக் கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜரானார். அப்போது லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என்றார்.

மேலும் இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல. கவனமாக பதிலளியுங்கள் என விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ‘சண்டக்கோழி 2’ படத்தை வெளியிடும் முன்பாக பணத்தை திருப்பித் தந்து விடுவதாக கூறினீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால், நீதிபதியை பாஸ் என அழைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோல பாஸ் என்று எல்லாம் இங்கு சொல்லக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்க வேண்டும் என கண்டிப்புடன் அறிவுறுத்தினார். அதன்பிறகு லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்றும், லைகாவால் தான் அந்த கடனை வாங்க நேரிட்டது என்றும் விஷால் பதிலளித்தார். அதையடுத்து இந்த குறுக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை (ஆக.2) தள்ளி வைத்த நீதிபதி, விஷால் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours