தந்தையின் சொத்துக்காக வாரிசுகள் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இடையில் பிச்சைக்காரன் ஒருவன் வந்து சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘ப்ளடி பெக்கர்’.
ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றி பிச்சை எடுக்கிறார் கவின். அவருடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இப்படியான சூழலில், அன்னதானம் போடுவதாக கூறி, பெரிய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் கவினை கவர்ந்திழுக்க, மறுபுறம் அதிலிருக்கும் ஆபத்தும் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அது என்ன ஆபத்து? அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்? என்பது மீதிக்கதை.
நடைபாதை வாழ் மக்களின் உயிர்கள் மீதான அலட்சியத்தையும், அவர்களை வாழத் தகுதியற்றவர்களாக கருதும் போக்கையும் அடிநாதமாக கொண்ட டார்க் காமெடி படத்தை முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவபாலன். கவினின் வாழ்க்கையும், அவரது சூழலையும், கட்டமைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் முடிந்த அளவுக்கு போரடிக்காமல் நகர்கிறது படம். யாசகம் பெறுபவர்களிடம் கவின் செய்யும் சேட்டைகள், உடனிருக்கும் சிறுவனின் டைமிங் வசனங்கள், அரண்மனை சம்பவங்கள், அங்கு நடக்கும் திருப்பங்கள் என சோர்வடையும்போது சில காட்சிகள் நிமிர வைக்கின்றன. கவின் – ரெடின் காம்போ டார்க் காமெடி களத்துக்கு உதவுகிறது. தவிர்த்து சில வித்தியாசமான கதாபாத்திரங்களை எழுதிய விதமும் கைகொடுக்கிறது. இயக்குநர் நெல்சனின் டச் ஆங்காங்கே வெளிப்படுகிறது.
நகைச்சுவை காட்சிகளைத் தொடர்ந்து சென்டிமென்ட் காட்சிகள் என்ற ‘மிக்சிங்’ உரிய தாக்கம் செலுத்தவில்லை. அதே போலவே, சில காமெடி காட்சிகள் மட்டுமே சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஒரேயடியாக ப்ளாஷ்பேக் காட்சியை திணிக்காமல் தேவைக்கேற்ப ஆங்காங்கே காட்சிப்படுத்தி இருந்தது சிறப்பு. இறுதிக்காட்சியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அதற்கேற்ற தீனியில்லாமல் சுற்றி வளைத்து முடித்திருப்பது திரைக்கதையின் தடுமாற்றத்தை பளிச்சிட வைக்கிறது. படம் முடியும்போது வரும் சென்டிமென்ட் காட்சி மட்டும் ஆறுதல். எல்லாவற்றையும் தாண்டி ஒரே இடத்தில் சுற்றும் படம் ஒரு கட்டத்தில் அயற்சி.
வித்தியாசமான தோற்றத்துடன், அப்பாவித்தனம் கலந்த உடல் மொழியில் தடம் பதிக்கிறார் கவின். தன்னைச் சுற்றியிருக்கும் காமெடி களத்தின் வெற்றிடத்தை நடிப்பால் நிரப்புவது பலம். ரெடின் கிங்ஸ் லீக்கு நகைச்சுவையைத் தாண்டியும் ஸ்கோர் செய்ய சில வாய்ப்புகள் கொண்ட கதாபாத்திரம். சுனில் சுகதாவின் வில்லத்தனம் கவனிக்க வைக்கிறது. பெரிய அளவில் பரிட்சயம் இல்லாத மற்ற கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை வெளிப்படுத்துகின்றன. ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பின்னணி இசையின் ரீமேக்கை நினைவூட்டுகிறார் ஜென் மார்டின். ஆனால் அதுவும் ரசிக்க வைக்கிறது. அரண்மனைக்குள் நெருடலில்லாமல் பயணித்து வெளியேறுகிறது சுஜித் சாரங்கின் கேமரா. ப்ளாஷ் பேக் காட்சிகளின் பொருத்தம் கச்சிதமாக அமைந்தாலும், படத்தை விரைந்து முடிக்காமல் நெளிய வைக்கிறது நிர்மல் எடிட்டிங்.
டார்க் காமெடி கதைக்களத்தையும், சென்டிமென்டையும் முழுமையாக பயன்படுத்தாமல் பாதி பாதியாக ஒட்டியதன் விளைவு கவினின் சட்டையைப் போல ஒட்டு போட்டு முழுமையற்ற உணர்வை கொடுக்கிறது ‘ப்ளடி பெக்கர்’.
+ There are no comments
Add yours