இந்தியன் 2- திரை விமர்சனம்.

Spread the love

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் ‘இந்தியன்’. அதன் இரண்டாம் பாகமாக, ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இந்தியன் 2’ எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

’இந்தியன்’ முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றி சாத்தியமானதற்கு முக்கியக் காரணம், அப்படம் நாட்டின் மூலை முடுக்குகளில் கூட நடக்கும் சின்னச் சின்ன ஊழலின் மூலம் எளிய மக்கள் அனுபவிக்கும் வலியை அப்படியே கண்முன் நிறுத்தியதுதான். மனோரமா வரும் காட்சி, சேனாபதியின் என்ட்ரி அட்டகாசம்

‘இந்தியன் 2’ படத்தில் பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான அம்சங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரிய குறை. இந்தியன் தாத்தாவால் கொல்லப்படும் நபர்கள் செய்த ஊழல் என்ன, எதற்காக அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற விவரிப்புகள் கூட இல்லாத நிலையில், அந்தச் சம்பவங்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படம் தொடங்கியது முதலே எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனங்களுடன் செல்கிறது. அதிலும் முதல்முறையாக தைவானில் இந்தியன் தாத்தா செய்யும் கொலைச் சம்பவம்மிகவும் சலிப்படையச் செய்கிறது.

முதல் பாகத்தில் அமைதியாக, அதே நேரத்தில் அதிரடி காட்டும் இந்தியன் தாத்தா, இதில் பேசுகிறார் பேசுகிறார் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். இது இல்லாமல் வர்மக் காலை என்ற பெயரில் அவர் செய்யும் சில சேஷ்டைகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட கதையின் தொடக்கத்திலேயே தூய்மைப் பணியாளர்கள், சாலையின் ஓரத்தில் சிறுநீர் கழிப்பவர்களை எல்லாம் ஏதோ சமூக விரோதி போல சித்தரிப்பதும், இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளும் ஏற்கத்தகுந்தவையாக இல்லை,

வர்மக் கலையில் புதுமையை சேர்க்கிறேன் பேர்வழி என்று வில்லன்களை பாட்டு பாடவைப்பது, ஆணை பெண் போல நடந்துகொள்ள வைப்பது, குதிரை போல ஓடச் செய்வது என காமெடி செய்திருக்கிறார்கள். வர்மக் கலை என்றால் என்னவென்று 90ஸ் கிட்ஸுக்கு அறிமுகம் செய்த ‘இந்தியன்’ கதாபாத்திரத்தை வைத்தே அதனை ஸ்பூஃப் செய்திருக்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

முந்தைய பாகத்தில் இருந்த குறிப்பிடத்தகுந்த அம்சமான எமோஷனல் காட்சிகளும் இதில் சுத்தமாக மிஸ்ஸிங். அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் வலிந்து திணிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. குறிப்பாக, சித்தார்த்தின் சிறுவயதில் அவர் அம்மா திருப்பதியில் முட்டி போட்டு படியேறுவதாக வைக்கப்பட்ட காட்சி எதற்கு? அதுபோல தேவையே இல்லாமல் படத்தில் ஒரு மரணக் காட்சி வேறு.

வர்மம் – கர்மம் வசனங்கள், லஞ்சம் வங்கும் இன்ஜினியர் பெயர், ‘பொறி.கி.கதிர்வேல்’ என பீறிட்டு வந்திருக்கும் கிரியேட்டிவிட்டியை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். முந்தைய பாகத்தில் வசனங்கள் ஒரு பாசிட்டிவ் அம்சம். ஆனால், இதில் எந்த இடத்திலும் வசனங்கள் ஈர்க்கவில்லை.

அனிருத் தனது பின்னணி இசை மூலம் படத்துக்கு வலுசேர்க்க முயன்றிருக்கிறார். எனினும், முந்தைய பாகத்தின் இசை வரும் இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ஹெவியாக மிஸ் செய்ய முடிகிறது. பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றை படத்தில் வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பிரம்மாண்டம் என்ற பெயரில் தங்க அறை, வைரம் பதிக்கப்பட்ட ஆமை, தண்ணீர் மீது நடனம் என தேவையே இல்லாத செலவுகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கு கொடுத்திருந்தால், ஊழல் ஒழிப்பு என்ற களத்தில் ‘நின்று’ ஆடியிருக்கலாம். ஆனால் கிரியேட்டிவிட்டி, புதுமை என்ற வஸ்துக்கள் கிஞ்சித்தும் இல்லாமல் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறது படக்குழு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours