‘கங்குவா’- திரை விமர்சனம்

Spread the love

மனிதனின் ஆகச் சிறந்த குணம் ‘மன்னிப்பு’ என்பதை பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஃபேன்டஸி உலகின் வழியே புதிய திரையனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் சிறுத்தை சிவா. அந்த அனுபவம் எந்த அளவுக்கு பலனளித்தது என்பதை பார்ப்போம்.

கோவாவில் வாழ்ந்து வரும் ஃபிரான்சிஸ் (சூர்யா) பணத்துக்காக, காவல் துறை கைகாட்டும் குற்றவாளிகளை பிடித்து தரும் உதவியாளர். முக்கிய குற்றவாளி ஒருவரை பிடிக்க செல்லுமிடத்தில் சிறுவன் ஒருவரை பார்க்கிறார். இருவருக்குள்ளும் முன்ஜென்ம பந்தம் ஒன்று இருப்பதை உணரும் பிரான்சிஸ், அந்தச் சிறுவனை கொல்ல துடிக்கும் கூட்டத்திலிருந்து மீட்க போராடுகிறார். அப்படியே கட் செய்தால், 1070-களில் பெருமாச்சி என்ற கிராமத்தில் வாழ்ந்த இனக்குழுவின் வாழ்க்கை திரையில் விரிகிறது. உண்மையில் யார் அந்த சிறுவன்? அவனுக்கும் பிரான்சிஸுக்கும் என்ன பந்தம்? 1070-களில் பெருமாச்சி கிராமத்தில் வாழ்ந்த இனக்குழுவுக்கும் கோவாவில் வாழும் இன்றைய பிரான்சிஸுக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் மீதிக்கதை.

1070 மற்றும் 2024 என இரு வேறு காலக்கட்டத்தையும் எடுத்துக்கொண்டு அதை ‘நான் லீனியர்’ முறையில் காட்சிகளை முன்னுக்குப் பின் கலைத்துபோட்டு விளையாடியிருக்கிறார் சிறுத்தை சிவா. படத்தின் பிரதான களமான 1070 காலக்கட்டத்தையும், அதில் வாழும் இனக்குழுவையும், போரை உள்ளடக்கிய அவர்களின் வாழ்வியலையும், வெவ்வேறு இனக்குழுவுக்குள் நடக்கும் மோதல்களையும், பிரமாண்ட மேக்கிங்கில் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது சிவா & டீம்!

3டி-யில் பார்க்கும் பார்வையாளர்களுக்கு போர்க்களத்துக்குள் இருக்கும் உணர்வு படத்துக்கு நெருக்கமாக்குகிறது. குறிப்பாக, கடலில் நடக்கும் சண்டைக் காட்சிகள், பாம்புகள் கொண்டு எதிரிகளை தாக்கும் யுக்தி, பெண்கள் மட்டுமே தனித்து நின்று போரிடுவது என மேக்கிங், தொழில்நுட்ப ரீதியாக படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. தவிர, கலை ஆக்கம், சிகை அலங்கார குழுவினரின் உழைப்பு திரையில் பளிச்சிடுகிறது.

ஆனால், மேற்கண்ட தொழில்நுட்ப அம்சங்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க மறுக்கின்றன. பெருமாச்சி இனக்குழுவினரின் சடங்குகள், வாழ்க்கை முறையை புரிந்துகொள்ள நுட்பமான காட்சிகளோ, சூர்யாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவின் நெருக்கத்தையும், மனமாற்றங்களையும் வெளிப்படுத்தும் ‘எமோஷனல்’ காட்சிகளோ இல்லை. மான்டேஜ் போல மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில் எதையும் முழுமையாக பின்தொடர முடியாதது சோகம்.

பாபி தியோலியின் வில்லத்தனம் பூஜ்ஜியம். முடிந்த அளவுக்கு, படத்தின் முதல் அரை மணி நேரத்தை கடப்பது நலம். காரணம் சூர்யா – யோகிபாபு – திஷா பதானி இணைந்து காதல், காமெடி பெயரில் நிகழ்த்தும் ‘அவுட்டேட்’தனங்கள் அபத்தம். படம் பெரும்பாலும் சண்டைக் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் அதைத் தாண்டி வேறு எதையுமே உணர முடியவில்லை. போலவே, சூர்யா என்ற ஒற்றை கதாபாத்திரத்தை தவிர்த்து மற்ற எந்தக் கதாபாத்திரமும் வலுவாக எழுதப்படவில்லை. அதனாலே மொத்த படமும் ஒருவரைச் சார்ந்தே நகர்கிறது. படத்தின் இறுதியில் வரும் சர்ப்ரைஸ் ஆறுதல்.

பழங்குடியின போர்வீரனாக தோற்றத்திலும் ஆக்ரோஷத்திலும் மிரட்டும் சூர்யா, உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுக்கிறார். மறுபுறும் ஜாலியாக சேட்டை செய்யும் பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக தோளில் சுமந்து கரை சேர்க்கிறார். காதலுக்காக திஷா பதானி, காமெடி என்ற பெயருக்காக யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ. மிரட்டலான உடலமைப்புடன், தான் சார்ந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார் பாபி தியோல். தவிர்த்து, நட்டி, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், போஸ் வெங்கட், ஹரீஷ் உத்தமன் என ஒரு லாரி கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பை கொடுத்தாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாக இல்லை.

திரையரங்கு முழுக்க இரைச்சலை நிரப்பியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். சண்டைக் காட்சிகள் பின்னணி இசை ஓகே என்றாலும், பல இடங்களில் ஒலிக்கும் அதீத இரைச்சலும், சூர்யாவின் ‘ஹை பீச்’ சத்தமும் ஒன்று சேர்ந்து காதுகளை பதம் பார்க்கின்றன. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேலும் கூட்டியிருக்கிறது. நிஷாந்த் யூசுஃப் கட்ஸ் இரு வேறு டைம்லைன்களை சரிவர கடத்தியிருக்கிறது என்றாலும், தேவையான இடங்களில் நிதானத்தை தவிர்க்கிறது. இதனால் கதையை உள்வாங்கிக் கொள்ள போதிய நேரம் கொடுக்கப்படவில்லை.

மொத்தத்தில் சிவாவின் புதிய பிரமாண்ட ஃபேன்டஸி முயற்சியில் மேக்கிங் அசத்தினாலும், கதையை சொன்ன விதத்தில் போதிய நுட்பமான விரிவாக்கமோ, நிதானமோ, ஆன்மாவான உணர்வுபூர்வமான காட்சிகளோ மிஸ் ஆனதால் இந்த கங்குவா பற்ற வைத்த நெருப்பு விட்டு விட்டு எரிகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours