மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தான் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார்.
திரைத்துறையில் கிடைத்த புகழைக் கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஏராளம். அப்படி வந்தவர்கள் பலர் வெற்றியும் பெற்று மக்களுக்குப் சேவையும் செய்திருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என இந்தப் பட்டியல் நீளமாகவே இருக்கிறது.
திரையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் வரிசையில் நடிகர் மன்சூர் அலிகானும் இருக்கிறார். இவர் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற கட்சியை நடத்தி வந்தார். அதை கடந்த ஜனவரியில் ’இந்திய ஜனநாயக புலிகள்’ என பெயர் மாற்றினார். இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார் மன்சூர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுகவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே!’ என குறிப்பிட்டுள்ளார்.
’இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியின் முதல் மாநாடு பிப்ரவரி 24-ம் தேதி சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “ மக்களவைத் தேர்தலில் தனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்” என்று சொன்னார். அதன்படி, ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் மன்சூர் அலிகான்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours