சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, அமெரிக்காவில் டென்னிஸ் போட்டியை கண்டுகளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி மற்ற விளையாட்டுகளுக்கும் தீவிர ரசிகர். கால்பந்து மீதான அவரது காதல் உலகம் அறிந்தது மற்றும் டென்னிஸ் போட்டியும் அவருக்கு பிடித்த ஒன்று தான்.
அமெரிக்காவில் விடுமுறையில் இருக்கும் தோனி யுஎஸ் ஓபன் 2023 போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையேயான ஆட்டத்தை அவர் பார்த்து ரசித்தார். இந்தப் போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களான சோனி ஸ்போர்ட்ஸ் இது தொடர்பான வீடியோவை பதிவேற்றியுள்ளனர்.
அதில் எம்எஸ் தோனி கார்லோஸ் அல்கராஸ் பின்னால் பார்வையாளர்கள் மத்தியில் காணப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தோனி கண்டுகளித்த 2023 அமெரிக்க ஓபன் கால் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். அவர் 6-3, 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட்களில் போட்டியை வென்றார். இந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷே மைதானத்தில் நடைபெற்றது.
+ There are no comments
Add yours