தீபாவளிக்கு ரிலீஸ் ஆன திரைப்படங்களில் ‘அமரன்’ தனித்துவ நடை போட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் மற்ற எல்லா படங்களை விடவும் ‘அமரன்’ வசூல் சாதனை புரிந்து வருகிறது. முன்பதிவில் இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் வேட்டையனை பின்னுக்கு தள்ளியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த வருடம் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் ‘கோட்’ 5.78 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதன்பிறகு ரஜினி நடித்த ‘வேட்டையன்’ 4.70 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள ‘அமரன்’ 4.78 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வேட்டையனை முந்தியிருக்கிறது.
நமது நிருபரிடம் பேசிய தருமபுரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த மாதேஷ் அஸ்வின் எனும் சிவகார்த்திகேயன் ரசிகர்,
‘நான் பத்து வருடங்களுக்கு மேலாக சிவகார்த்திகேயன் ரசிகராக இருக்கிறேன். அவரின் எளிமையும், தன்னம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். இந்த திரைப்படம் அவரது பாணியில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு சிவகார்த்திகேயன் ரசிகனையும் பெருமைப்பட வைக்கும் அளவிற்கு இருக்கிறது. நானே வெவ்வேறு ஊரில் இருக்கும் எனது நண்பர்கள் பலருக்கு இந்த திரைப்படத்தை முன்பதிவு செய்து அவர்களையும் பார்க்க செய்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அமரன் திரைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மூலமாக மட்டுமன்றி, விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்து வருவதால் இதன் வசூல் மேலும் சாதனைகளை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours