ஹைதராபாத்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’படப்பிடிப்பு முடித்துவிட்டார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கும் என தகவல் வெளியானது. ஆனால், ப்ரீ புரொடக்ஷன் பணிகளால் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை உறுதி செய்யும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “Day 1 coolie’ என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours