பாட்னா: பிஹார் மாநிலம் தர்பங்காவில் இருந்து புதுடெல்லிக்கு சென்று கொண்டிருந்த பிஹார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பீதியை உருவாக்கியது.
பிஹார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12565) ரயில், தர்பங்காவிலிருந்து புது டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று மாலை உத்தரப் பிரதேசத்தின் கோண்டா அருகே சென்றபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடையே பீதியைத் தூண்டியது.
இதுகுறித்து பேசிய கோண்டா அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) இன்ஸ்பெக்டர் நரேந்திர பால் சிங், “டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். இரவு 7:30 மணியளவில் ரயில் கோண்டா சந்திப்பில் நிறுத்தப்பட்டது. மேலும், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ரயில் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது” என்று கூறினார். புரளியான வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours